மகிந்தவின் பாதுகாப்பு! அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த மொட்டுக்கட்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் தங்காலை பிரதேசத்தின் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளையடுத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு 7 இல் வசித்து வந்த விஜேராம மாவத்தை, முன்னர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது எனினும் தங்காலைக்கு அதே அளவிலான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொழும்பில் அவர் வசித்து வந்த இடம் பாதுகாப்பானது. ஆனால் தங்காலை அப்படிப்பட்ட பகுதி அல்ல. அவரது வீட்டின் முன் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அது பாதுகாப்பான பகுதி அல்ல.

தங்காலையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்திக்க இப்போது ஒரு பெரிய கூட்டம் கூடிவருவதாகவும், தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாள்வதில் தற்போதைய பாதுகாப்புக் குழு சிரமப்படுகிறது.

பாதுகாப்பு தேவையில்லை என்று முன்னர் கூறியவர்கள் உட்பட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். இதேபோல், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பும் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

ராஜபக்ச தற்போது தனது சொந்த ஊரில் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என சில அரசாங்க பிரதிநிதிகள் கூறியதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

எனினும், தீங்கு விளைவிக்க நினைத்தால், அவர்களின் இலக்கு சொந்த ஊரா அல்லது கொழும்பா என்பது முக்கியமல்ல. அத்தகைய வாதங்கள் இல்லாமல் அவரது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *