முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மூலம் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டு, மீட்கப்பட்ட ஆயுதங்கள் பெக்கோ சமன் எனப்படும் பாதாள உலகக் குழு தலைவருக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக பெக்கோ சமன் எனப்படும் பாதாள உலகக் குழு தலைவரால் இவை சம்பத் மனம்பேரிக்கு வழங்கப்பட்டுள்ளன.
சம்பத் மனம்பேரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
சம்பத் மனம்பேரியின் நெருங்கிய தோழிக்கு சொந்தமான வீடொன்றில் வைத்து புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டன.
குறித்த ஆயுதங்களில் 9 மி.மீ பிஸ்டல், 115 T-56 ரக தோட்டாக்கள், தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக இரு மெகசின்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் பெக்கோ சமனின் வழிக்காட்டுதல்களின் கீழ், தான் பொறுப்பேற்றதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து கடந்த 03 ஆம் திகதி மித்தெனியவில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைத்ததாகவும் மனம்பேரி தெரிவித்துள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மூலம் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.